‘விபரீதம்’... விலங்குகளுக்கான ஊசியை மனிதர்களுக்குச் செலுத்திய போலி மருத்துவர்!

‘விபரீதம்’... விலங்குகளுக்கான ஊசியை மனிதர்களுக்குச் செலுத்திய போலி மருத்துவர்!

போலி மருத்துவர்களால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் கணக்கற்றவை. தவறான சிகிச்சையளிப்பது, ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசியை மற்றவருக்குப் பயன்படுத்துவதால் தொற்றுநோய்களைப் பரவச் செய்வது எனச் செயல்படும் மருத்துவ போலிகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறித்து இன்று வரை முறையான புள்ளிவிவரங்கள் இல்லை. அதேவேளையில், நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியிருக்கிறது. ‘போலி மருத்துவர்கள் கைது’ என அவ்வப்போது செய்திகள் வெளியானாலும், விழிப்புணர்வில்லாமல் அவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு அவஸ்தைப்படுபவர்கள் அதிகம்.

ஒடிசா மாநிலத்தில் அப்படி ஒரு மோசமான அனுபவம் இரண்டு பேருக்கு ஏற்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள டாகுர்முண்டா பகுதியைச் சேர்ந்த இருவர், தங்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக அங்குள்ள மருத்துவர் ஒருவரை அணுகியிருக்கின்றனர். அதில் ஒருவருக்கு முதுகுவலி பாதிப்பு இருந்தது. சனிக்கிழமை அவர்கள் இருவருக்கும் ஊசி போட்டு அனுப்பியிருக்கிறார் அந்த மருத்துவர்.

எனினும், வீட்டுக்குச் சென்ற இருவரின் உடல்நிலையும் மோசமடைந்தது. இதையடுத்து அங்குள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்களிடம் விசாரித்தபோதுதான் இருவரும் போலி மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்றிருந்தது தெரியவந்தது. அதைவிட கொடுமை, அவர்களுக்குச் செலுத்தப்பட்ட ஊசி விலங்குகளுக்குச் செலுத்தப்படும் ஊசி என்பதுதான்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. தலைமறைவாகிவிட்ட போலி மருத்துவர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in