
க்யூ நெட் நிறுவனம் போலி கம்பெனிகள் மூலம் 2,000 கோடி வரை மோசடி செய்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஹாங்காங் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் க்யூ நெட் நிறுவனமானது, விகான் டைரக்ட் செல்லிங் என்ற நிறுவனம் மூலமாக இந்தியாவில் பொதுமக்களிடம் முதலீட்டை ஈர்த்தது. முதலீடு செய்தவர்களுக்கு தங்கக்காசு வழங்கப்படும் என
பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. எம்எல்எம் என்ற முறைப்படி நாடு முழுவதும் 5 லட்சம் பேரிடம் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர் விசாரணை மேற்கொண்டது.
இந்த மோசடி தொடர்பாக 90 கோடிக்கு மேல் பணம் உள்ள 36 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது கடந்த இரண்டு நாட்களாக சென்னை, மும்பை, பெங்களூரூ ஆகிய பகுதிகளில் மோசடிக்கு தொடர்புடைய ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
மும்பை பொருளாதார குற்றப்பிரிவு 400 கோடி மோசடி விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டதில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.