‘அனைத்து திரையரங்குகளிலும் ராணுவத்தின் தீரம் போற்றும் ஆவணப் படங்கள்’

புதின் புதிய உத்தரவு
புதின்
புதின்

ரஷ்ய ராணுவத்தின் வீரதீரங்களை போற்றும் ஆவணப்படங்களை, அந்நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுமாறு ரஷ்ய அதிபர் புதின் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி ஒரு வருடத்தை எட்டவிருப்பதை முன்னிட்டு, பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. முதலாவது, உக்ரைன் போர் முனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உக்ரைன் தாக்குதல் தொடர்பான வியூகங்களை மாற்றியமைத்தும், நவீன தளவாடங்களை ராணுவ வீரர்களுக்கு அளித்தும் போர் நடவடிக்கைகளை முடுக்கி வருகிறார்கள்.

இரண்டாவதாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிரான ரஷ்ய மக்களின் மனநிலையை மாற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஊடக தணிக்கை அங்கே கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுதந்திரமான சர்வதேச ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், ரஷ்யாவின் நெருக்கடி தாளாது வெளியேறி வருகின்றனர். ரஷ்ய ஊடகங்களிலிலும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் முதல் தீவிர தணிக்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ’போர்’ என்ற பதத்துக்கு தடை விதிக்கப்பட்டு, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்பதையே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய வீரர்கள்
உக்ரைனில் ரஷ்ய வீரர்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் பிரச்சாரம் செய்து வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அந்த ’விஷமப் பிரச்சாரத்துக்கு’ ரஷ்யர்கள் ஆளாகாது இருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, உக்ரைன் போர் முனையில் தீரத்தோடு போராடும், ’தேச பக்தர்களான ரஷ்ய வீரர்களின் சாகசங்களை’ புகழும் வகையில் ஆவணப்படங்களை உருவாக்குமாறு ரஷ்ய திரைத்துறையினரை பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

புதினின் புதிய உத்தரவுப்படி, ரஷ்ய திரையங்குகளில் இந்த ஆவணப்படங்கள் திரையிடப்பட்ட பின்னரே வழக்கமான படக்காட்சிகள் தொடங்கும். இந்த ஆவணப்படங்களின் வாயிலாக மக்கள் மத்தியிலான உக்ரைன் போர் எதிர்ப்பு மனநிலையை தணிக்கவும், ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உத்வேகம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு பிப்.24 அன்று உக்ரைன் மீதான தனது ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in