‘ரஷ்யா தோற்றால் அணுஆயுதங்கள் வெடிக்கும்’: முன்னாள் அதிபர் திட்டவட்டம்!

பிரிம்ஸ்டோன் ஏவுகணை
பிரிம்ஸ்டோன் ஏவுகணை

‘உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் வழமையான போர் தோல்வியடைந்தால் அணுஆயுதப் போர் வெடிக்கும்’ என ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், புதினின் நெருங்கிய சகாவுமான திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யப் போர் தொடங்கியதன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. சில தினங்களில் தொடங்கி அதிகபட்சம் சில வாரங்களில் முடிந்துவிடும் என அனுமானிக்கப்பட்ட இந்தப் போர், ஓராண்டு முடிவடைய உள்ள நிலையிலும் இழுபறியில் நீடிக்கிறது. உக்ரைனை துச்சமாக மதித்து போர் தொடுத்த ரஷ்யா, உக்ரைனுக்கு போரத்தளவாடங்கள் முதல் உளவு தகவல்கள் வரை வாரி வழங்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளால் எரிச்சலைடைந்து வருகிறது.

திமித்ரி மெத்வதேவ்
திமித்ரி மெத்வதேவ்

உக்ரைனின் போர் முனைகள் சிலவற்றில் ரஷ்யா பின்வாங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகும் என ரஷ்யா கணித்திருக்கவில்லை. மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருவதை தவிர்க்க, தன்னால் முடிந்த நடவடிக்கைகளை ரஷ்யா தொடங்கியிருக்கிறது. அதில் ஒன்றாக ரஷ்யாவை தோற்கடிக்கும் நேட்டோவின் முயற்சிக்கு, அணுஆயுதங்களை முன்வைத்து எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவருமான திமித்ரி மெத்வதேவ் இந்த மிரட்டலை வெளியிட்டிருக்கிறார். ’ரஷ்யாவுக்கு சேதம் விளைவிக்கும் வகையில், நேட்டோ படைகள் உக்ரைனுக்கு உதவும் போக்கு தொடருமானால், அந்த சூழல் அணுஆயுதப் போரில் முடிவடையும்’ என அவர் எச்சரித்துள்ளார். ’தற்போதைய வழமையான போரில் ரஷ்யாவின் தோல்வி என்பது, அணுஆயுதங்கள் வெடிப்பதை தவிர்க்க முடியாததாக்கி விடும்’ எனவும் திமித்ரி மெத்வதேவ் அச்சுறுத்தல் தந்திருக்கிறார்.

பிரிட்டனின் பிரிம்ஸ்டோன்
பிரிட்டனின் பிரிம்ஸ்டோன்

ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய சகாவான திமித்ரி மெத்வதேவ், 2008 - 2012 இடையே ரஷ்யாவின் அதிபராகவும் பதவி வகித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு ஓர் ஓபிஎஸ் போல, புதினுக்கு திமித்ரி மெத்வதேவ் என்று சொல்லலாம். ரஷ்ய அதிபராக புதின் அடுத்தடுத்து தொடர்வதற்கு சட்டச்சிக்கல் எழுந்தபோது, தனது நம்பிக்கைக்கு உரிய இந்த திமித்ரி மெத்வதேவை அதிபர் நாற்காலியில் அமர வைத்தார். அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரஷ்ய பிரதமர் பொறுப்பிலிருந்து, மறைமுகமாக அதிபர் அதிகாரத்தையும் ஆட்டுவித்த புதின், பிற்பாடு கிட்டத்தட்ட வாழ்நாள் அதிபராக உருவெடுத்தார். இந்தளவுக்கு புதினுக்கு நெருக்கமான திமித்ரி மெத்வதேவ் சொல்வதால், அதனை அலட்சியப்படுத்த வாய்ப்பின்றி சர்வதேச நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

பிரிட்டன் தனது தனித்துவம் மிக்க 600 பிரிம்ஸ்டோன் ஏவுகணைகளையும், டென்மார்க் தேசம் தன் வசமுள்ள பிரெஞ்சு தயாரிப்பான அதிநவீன தளவாடங்களையும் அளிப்பதாக அறிவித்ததன் மத்தியில் திமித்ரி மெத்வதேவ் இந்த அணுஆயுத மிரட்டல் அஸ்திரத்தை வீசியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in