எங்க அம்மாவை ஜெயிலில் போடுங்க: புகார் அளித்த 3 வயது சிறுவனால் பதறிய பெண் எஸ்ஐ

எங்க அம்மாவை ஜெயிலில் போடுங்க: புகார் அளித்த  3 வயது  சிறுவனால் பதறிய பெண் எஸ்ஐ

தனது சாக்லேட்டுகளைத் திருடி ஒளித்து வைத்த தாய் மீது காவல் நிலையத்தில் 3 வயது சிறுவன் புகார் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்த 3 வயது சிறுவன் சாக்லேட் கேட்டு தாயிடம் அடம் பிடித்துள்ளான். ஆனால், அவர் சாக்லேட்டுகளை ஒளித்து வைத்துக் கொண்டு சிறுவனுக்குத் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது தாய் சாக்லேட்டுகளைத் திருடி ஒளித்து வைத்துள்ளதாகவும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று தந்தையிடம் கூறியுள்ளான்.

இதைக்கேட்ட அவனது பெற்றோர் சிரித்தனர். ஆனால், தன் தாய் மீது புகார் கொடுக்க வேண்டும் என்பதில் அந்த சிறுவன் பிடிவாதமாக இருந்துள்ளான். தனது தந்தையிடம் காவல் நிலையம் அழைத்துச் செல்லுங்கள் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளான். இதனால் அவனை காவல் நிலையத்திற்கு நேற்று அவனது தந்தை அழைத்துச் சென்றார். காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரியங்கா நாயக்கிடம் நடந்தவற்றை சிறுவனின் தந்தை கூறியுள்ளார். இதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். விளையாட்டாய் சாக்லேட்டை ஒளித்து வைத்த தாய் மீது புகார் அளிப்பதில் சிறுவன் பிடிவாதமாக இருந்துள்ளான். இதனால் அவனிடம் புகார் பெறுவது போல காவல் துணை ஆணையர் பிரியங்கா புகாரைப் பெற்றுள்ளார்.

அவரிடம் சிறுவன், தனது தாய் சாக்லேட்டுகளைத் திருடியதாக புகார் அளித்தான். தனது வீட்டில் என்ன நடந்தது என்பதை காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரியங்காவிடம் சிறுவன் புகார் கூறும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் பொதுவாக போலீஸாரைக் கண்டுப் பயப்படும் போது காவல் நிலையம் சென்றால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற சிந்தனை 3 வயது சிறுவனுக்கு வந்ததைச் சுட்டிக்காட்டிய பிரியங்கா, சிறுவனின் செயலுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

உன் புகாரின் பேரில், உன் தாயை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று அந்த சிறுவனுக்கு நிலைமையைப் புரிய வைத்து அவனது தந்தையுடன் காவல் துணை ஆய்வாளர் பிரியங்கா நாயக் அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in