உக்ரைன் செல்ல துடிக்கும் பஞ்சாப் இளைஞர்கள்: காரணம் என்ன?

மீட்பு பணிக்கான உதவி மையங்களில் விசாரிப்பது அதிகரிப்பு
உக்ரைன் செல்ல துடிக்கும் பஞ்சாப் இளைஞர்கள்: காரணம் என்ன?

ரஷ்யா படையெடுத்திருக்கும் உக்ரைன் நாட்டிற்கு போர் சமயத்தில் செல்ல பஞ்சாப் இளைஞர்கள் முயல்வதாகத் தெரிகிறது. இதற்காக மீட்பு பணியில் இறங்கியுள்ள அரசு உதவி மையங்களுக்கு போனில் விசாரிப்பது அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பஞ்சாபிகள். வருடந்தோறும் சராசரியாக ரூ.28,500 கோடியை வருமானத்தை கல்வி உள்ளிட்டக் காரணங்களுக்காக வெளிநாடுகள் செல்ல பஞ்சாபிகள் செலவிடுவதாக மக்களவையின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. வருடத்திற்கு சராசரியாக ஒன்றரை லட்சம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அவர்கள் குடும்பத்தின் நிலங்கள் கூட விற்பதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் காலத்தில் அங்கு சென்று தங்கிவிட பஞ்சாபின் சில இளைஞர்கள் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் உக்ரைனில் சிக்கியவர்கள் மீட்கும் பணிக்கான பஞ்சாபின் அரசு உதவிமையங்களுக்கு போர் செய்து விசாரிப்பது அதிகரித்துள்ளது. இதற்கு அந்த மையங்களை சேர்ந்தவர்கள் அங்கு போவது ஆபத்து எனவும், இந்த போர் சமயத்தில் உக்ரைனுக்கு செல்ல இந்திய அரசு அனுமதிக்காது என்றும் பதிலளிக்கின்றனர். எனினும், இதை பற்றிக் கவலைப்படாமல் உக்ரைனுக்கு செல்வது எப்படி? எனக் கேள்விகளை தொடுப்பது தொடர்கிறது.

இதுபோன்றவர்கள் மீதானத் தகவல்களை, உதவி மையங்கள் மூலமாக புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீது பஞ்சாப் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளன. உக்ரைன் செல்ல விசாரிப்பவர்களின் கைப்பேசி எண்கள் மூலமாக அவர்களை பஞ்சாப் போலீஸார் நேரில் சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் போர் சமயங்களில் செல்வது ஆபத்து என விளக்கி அறிவுரைகளையும் கூறி வருவதாகத் தெரிகிறது.

இதுபோன்ற போர் நிகழும் நாடுகளுக்கு செல்வது ஆபத்தானது என மத்திய அரசு தடைசெய்து, தனது அறிவிக்கை வெளியிடுவது வழக்கம். இதுபோல், உக்ரைன் போர் மீதும் அங்கு செல்வது ஆபத்து எனக் கூறி தடை அறிவிக்கை வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போது உக்ரைனுக்கு பயணிகள் விமானங்களும் இந்தியாவிலிருந்து செல்வதில்லை. மேலும் தன் நாட்டுக்கு வருவதற்கான விசாவை அளிப்பதையும் உக்ரைன் நிறுத்தி வைத்துள்ளது.

போர் குறித்த செய்திகளை சேகரிக்கும் சில இந்திய ஊடகங்கள், உக்ரைன் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கே செல்கின்றனர். அங்கிருந்து தான் தனது செய்திகளை சேகரித்து அனுப்பி வருகின்றனர். இவர்களுக்கும் உக்ரைனில் நுழைய அனுமதி கிடைப்பதில்லை. ஏற்கெனவே, உக்ரைனில் செய்தியாளர்களாக இருப்பவர்கள் மட்டுமே போர்குறித்த செய்திகளை திரட்டி அளித்து வருகின்றனர்.

இச்சூழலில், உக்ரைன் செல்ல விரும்பும் பஞ்சாப் இளைஞர்கள் ரஷ்யா வழியாக அங்கு நுழையத் திட்டமிடுகின்றனர். போர் முடியும் வரை ரஷ்யாவில் தங்கி பிறகு உக்ரைனில் நுழைந்து ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைப்பது அவர்கள் நோக்கம். இதேவகையில் மேலும் சிலர் ஐரோப்பிய நாடுகள் வழியாகவும், போருக்கு பின் உக்ரைனில் நுழைய முயல்வதாகவும் தகவல் கிடைக்கின்றன. இதற்கு சர்வதேச நாடுகளில் அதிகமாகப் பரவி வாழும் பஞ்சாபிகளும் உதவுவதாகத் தெரிகிறது.

இதுபோல், பெரும்பாலானப் பஞ்சாபிகளின் வெளிநாடுகளின் மோகம், அம்மாநிலக் கல்விநிலையங்களிலும் பாதிக்கிறது. இதனால், பஞ்சாபின் கல்வி நிலையங்களில் பொறியியலுடன் மருத்துவப் பாடங்களின் இடங்களும் முழுமையாக நிரம்புவதில்லை. இதில், பஞ்சாபின் இளைஞர்களில் பலர் போதைக்கு அடிமையாவதும் காரணமாகி விட்டதாகப் புகார்கள் உள்ளன. இப்பிரச்சினை மார்ச் 10 முடிவுகள் வெளியாக உள்ள பஞ்சாபின் தேர்தல் பிரச்சாரத்திலும் எழுந்திருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in