டெல்லி விமான நிலையத்துக்கு பஞ்சாபிலிருந்து சொகுசுப் பேருந்துகள்: ஆதரவும் எதிர்ப்பும்

டெல்லி விமான நிலையத்துக்கு பஞ்சாபிலிருந்து சொகுசுப் பேருந்துகள்: ஆதரவும் எதிர்ப்பும்

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் அரசு, இன்று முதல் அம்மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து டெல்லி விமான நிலையத்துக்கு சொகுசுப் பேருந்துகளை இயக்கவிருக்கிறது. ஜலந்தர் நகரிலிருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குச் செல்லும் சொகுசுப் பேருந்துகளை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் இணைந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கொடியசைத்துத் தொடங்கிவைக்கவிருக்கிறார். இதன் மூலம் போக்குவரத்து மாஃபியாவுக்கு முடிவு கட்டப்படும் என்று பகவந்த் மான் அரசு தெரிவிக்கிறது.

முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான பேருந்துகள்தான் இதற்கு முன்பு பஞ்சாபிலிருந்து டெல்லிக்குச் சென்றுவந்தன. பஞ்சாபிலிருந்து செல்லும் அரசுப் பேருந்துகள், மாநிலங்களுக்கு இடையிலான டெல்லி பேருந்து முனையம் வரை மட்டும் சென்றுவந்தன. அந்த வகையில், இந்தத் திட்டம் பஞ்சாப் மக்களுக்குப் பலனளிக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகின்றனர்.

இதுதொடர்பாகக் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், இதற்கு முன்பு பொதுமக்களிடம் தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையடித்துவந்ததாகவும், தனியார் பேருந்து நிறுவனங்களில் ஒரு சிலர் மட்டும் ஆதிக்கம் செலுத்திவந்ததாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மறுபுறம், இதை வரவேற்பதாகக் கூறும் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் சங்கமான பஞ்சாப் மோட்டார் யூனியன், 2,000 சொகுசுப் பேருந்துகளை இயக்கிவரும் தங்களுக்கு இம்முடிவால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கவலை தெரிவித்திருக்கிறது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்துகளில் கருப்புக் கொடி கட்டப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ஜர்னைல் சிங் கர்டிவால், தி இந்து ஆங்கில நாளிதழிடம் நேற்று பேசியபோது, “முந்தைய அரசு பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் எனக் கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 50 சதவீதம் பெண்கள் அரசுப் பேருந்துகளிலேயே பயணம் செய்கிறார்கள். இதனால் எங்கள் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாகப் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படவில்லை. இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.

மறுபுறம், இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்க டெல்லியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவால் வருவதை வைத்து ஆம் ஆத்மி கட்சியையும், பகவந்த் மான் அரசையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in