‘உங்கள் தாய், சகோதரிக்குப் பாதுகாப்பு... எங்களுக்கு இல்லையா?’ - பகவந்த் மீது பாயும் பஞ்சாப் எதிர்க்கட்சிகள்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள், அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 184 பேரின் பாதுகாப்பு ரத்துசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய சூழலில், இவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் நிலவரம் குறித்த ஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.

நீதிமன்றத்தின் சிறப்பு உத்தரவுகளின் பேரில் இவர்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என ஏப்ரல் 20 தேதியிட்ட கடிதத்தில், பாதுகாப்புப் பிரிவுக்கான துணை டிஜிபி தெரிவித்திருக்கிறார். இந்தக் கடிதம், காவல் துறை ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

இதில் அகாலி தளம், பாஜக போன்ற கட்சியினரைவிடவும் பெரும்பான்மையாக காங்கிரஸ் தலைவர்கள்தான் பாதுகாப்பு வளையத்தை இழந்திருக்கிறார்கள். பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மகன் ரணீந்தர் சிங், முன்னாள் அமைச்சர் ஆதேஷ் பிரதாப் சிங்கின் மனைவி புனீத் கவுர், முன்னாள் நிதியமைச்சர் மன்ப்ரீத் சிங்கின் மகன் அர்ஜுன் பாதல், பஞ்சாப் பாஜக பொதுச்செயலாளர் ஜிவான் குப்தா, பாஜக முன்னாள் தலைவர் ரஜீந்தர் பண்டாரி உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி
பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி

சுர்ஜித் குமார் ரக்ரா, சுச்சா சிங், மதன் மோகன் மிட்டல் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. குறிப்பாக, முதல்வர் பகவந்த் மானின் தாய் மற்றும் சகோதரிக்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சியினர் கேள்விக்குட்படுத்தியிருக்கின்றனர். தற்போதைய அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது பற்றி விமர்சித்திருக்கும் எதிர்க்கட்சிகள், ‘பதவியேற்ற ஒரு மாதத்திலேயே பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு அமைச்சர்கள் அப்படி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

பஞ்சாப் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், டெல்லி சென்று அர்விந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்த பகவந்த் மான், அப்போதே முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் என 122 பேரின் பாதுகாப்பு ஏற்பாடு ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in