"உயிரைப் பற்றி கவலைப்படுபவர் உயர்ந்த பொறுப்புக்கு வரக் கூடாது!"

படேலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி பஞ்சாப் முதல்வர் பரபரப்பு ட்வீட்
"உயிரைப் பற்றி கவலைப்படுபவர் உயர்ந்த பொறுப்புக்கு வரக் கூடாது!"
பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி

பஞ்சாபில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக, பிரதமர் மோடியின் வாகனம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் முதல்வர் - பாஜக இடையே தொடர்ந்து வாதப்பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன.

சர்தார் வல்லபாய் படேலின் வாசகம் ஒன்றை மேற்கோள் காட்டி பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் அவற்றுள் ஒன்று.

“தனது கடமையைவிடவும் உயிரைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர், இந்தியா போன்ற தேசத்தில் உயர்ந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று வல்லபாய் படேல் சொன்ன வார்த்தைகளை அவரது படத்துடன் மேற்கோள் காட்டியிருக்கிறார் சரண்ஜீத் சிங்.

நேற்று (ஜன.7) இரவு 10.44-க்குப் பதிவிடப்பட்ட இந்த ட்வீட்டுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

பிரதமரின் பாதுகாப்பில் மீறல் ஏற்பட்ட விவகாரத்தை வைத்து, பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்திவருகின்றனர். பிரதமர் மோடியைக் கொல்ல பஞ்சாப் அரசும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சதி செய்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, “பிரதமரைக் காக்க துப்பாக்கி குண்டைக்கூட எதிர்கொள்ளத் தயார் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். இதையும் தாண்டி வேறு என்ன நான் செய்ய வேண்டும்? என் மணிக்கட்டை அறுத்துக்கொள்ள வேண்டுமா?” என்று சரண்ஜீத் சிங்ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், அவரது இந்த ட்வீட் புதிய புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.