போலி நிலைஆணையை பயன்படுத்தி தண்டிக்கிறார்: போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் மீது போலீஸில் புகார்

போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் மீது போலீஸில் புகார்
போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் மீது போலீஸில் புகார் போலி நிலைஆணையை பயன்படுத்தி தண்டிக்கிறார்: போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் மீது போலீஸில் புகார்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். போலி நிலைஆணையை பயன்படுத்தி போக்குவரத்து ஊழியர்களை தண்டித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அதில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பணியில் நடைபெறும் தவறுகளுக்கு அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து நிலை ஆணை ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களுக்கும் இதுபோன்ற நிலைஆணை வரையறை செய்யப்பட்டு பின்பற்றப்படுவது வழக்கம்.

அதுபோல 1978-ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக்கழகமாக இருந்தபோது பின்பற்றப்பட்டு வருகின்ற நிலை ஆணை பல வருடங்களாக நடைமுறையில் உள்ளது. ஆனால் எந்த ஒரு அரசு ஆவணமும், அரசு உத்தரவும், அத்துறை ரீதியான அரசு அதிகாரி கையொப்பமிட்டு அரசு முத்திரையிட்டு இருந்தால் மட்டுமே சட்டப்படி செல்லுபடி ஆகும் என்பது விதி. ஆனால் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் நிலைஆணையில் அது போன்று எந்த ஒரு அதிகாரியும் கையொப்பமிட்டதாகவோ அரசு முத்திரை இட்டதாகவோ ஆவணங்களில் இல்லை. மேலும் பல்லவன் போக்குவரத்துக்கழகமாக இருந்த இந்நிறுவனம் அதன்பிறகு அரசு போக்குவரத்துக்கழகம் என்றும் தற்பொழுது மாநகர போக்குவரத்துக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் பெயர் மாற்றம் செய்யும் போது நிலை ஆணையிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மாறாக கடந்த பல ஆண்டுகளாக பல்லவன் போக்குவரத்துக்கழகம் என்ற பெயரிலேயே நிலை ஆணை உள்ளது. இதுவே சட்டப்படி குற்றம். எனவே அதிகாரியின் கையெழுத்து இல்லாமலும் அரசு முத்திரை இல்லாமலும் தற்போது வரை நடைமுறையில் உள்ள நிலைஆணையை பின்பற்றி போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லாது.

எனவே உரிய அங்கீகாரம் பெறாத நிலைஆணையை போலியாக பயன்படுத்தி வரும் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம் மீது ஆவண மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகி கோதண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டப்படி எந்தவித அங்கீகாரமும் இல்லாத ஒரு ஆவணத்தை போலியாக பயன்படுத்தி அதன் மூலம் பல நூறு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஊழியர்கள் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் சென்ற போதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் போக்குவரத்துக் கழகம் பின்பற்றப்படும் நிலைஆணையில் அரசு அதிகாரி கையொப்பம், அரசு முத்திரை இல்லை என்பதை போக்குவரத்து கழகமே எழுத்துப்பூர்வமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் போலி ஆவணத்தை வைத்து எவ்வாறு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இது தொடர்பாக உடனடியாக காவல்துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in