
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கருத்தரிப்பதற்காக, மந்திரவாதியின் அறிவுறுத்தலின்படி ஒரு பெண்ணை அவரது மாமியார் மற்றும் கணவர் மனித எலும்புத்தூளை சாப்பிட கட்டாயப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
புனேயில் கர்ப்பம் தரிப்பதற்காக ஒரு பெண்ணை பல அமாவாசை இரவுகளில் வலுக்கட்டாயமாக சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று, மனித எலும்புகளை தூளாக்கி சாப்பிடும்படி அவரின் கணவன் மற்றும் மாமியார் வற்புறுத்தியுள்ளனர். மற்றொரு வகையான சடங்குகளில் மாமியார் பாதிக்கப்பட்ட பெண்ணை மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் "அகோரி" பயிற்சியில் ஈடுபடவும் வைத்துள்ளார். இந்த நடைமுறைகளின் போது, அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் தொலைபேசியில் ஒரு மந்திரவாதியிடமிருந்து அறிவுறுத்தல்களையும் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, அவரின் கணவர், மாமியார் மற்றும் மந்திரவாதி உட்பட ஏழு பேர் மீது புனே போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
இது குறித்து புனே நகர காவல்துறையின் துணை போலீஸ் கமிஷனர் சுஹைல் சர்மா கூறுகையில், “மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம், வரதட்சணை மற்றும் மனிதாபிமானமற்ற, தீய அகோரி மற்றும் சூனியம் உட்பட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும், இந்த சடங்குகள் நடந்த குறிப்பிட்ட சுடுகாட்டையும் நாங்கள் தேடத் தொடங்கியுள்ளோம். அந்த குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வோம், அதன் பிறகு சம்பவம் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிப்படும்” என தெரிவித்தார்.
போலிஸாரின் முதற்கட்ட விசாரணையின்படி, குற்றம்சாட்டப்பட்ட அந்த குடும்பம் நன்கு படித்தவர்கள், ஆனாலும் அவர்கள் இதுபோன்ற நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.