புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் மனைவியர் தீவிர போராட்டம்

புல்வாமா ராணுவ வீரர்களின் மனைவியர் போராட்டம்
புல்வாமா ராணுவ வீரர்களின் மனைவியர் போராட்டம்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான ராணுவத்தினரில், ராஜஸ்தானை சேர்ந்த வீரர்களின் குடும்பத்தினரின் நிவாரணம் கோரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

2019, நவ.14 அன்று சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகன அணிவகுப்பில் இடைமறித்த, ’ஜெய்ஷ் இ முகமது’ தற்கொலைப்படை தாக்குதலால் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் 5 பேர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அப்போது அந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்கு, ரொக்கத்தொகை, இலவச மனை உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட இடங்களுக்கு வீர மரணமடைந்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்றும் ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்திருந்தது.

ஆனால் ”அதன் பின்னர் 4 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதும், நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களின் மனைவியருக்கு உரிய நிவாரணம் போய்ச் சேரவில்லை. அரசு உறுதியளித்தவாறு ராணுவ வீரர்களின் பெயர்கள் எங்கேயும் சூட்டப்படவில்லை. இது குறித்து ராணுவ வீரர்களின் குடும்பத்தாரோடு முதல்வரை சந்தித்து முறையிட முயன்றபோதும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை” என்று பாஜக எம்பியான கிரோடி லால் மீனா குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே உயிரிழந்த வீரர்களில் மூவரின் மனைவியர், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வீட்டு முன்பாக பிப்.28 முதல் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 6 நாட்களுக்கு முன்னதாக காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கினர். அதில் சிலரது உடல்நிலை இன்று மோசமடையவே, போலீஸார் மூவரையும் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி காவல்நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் அசோக் கெலாட் முதல்வராக ஆட்சி புரிகிறார். 2023 டிசம்பருக்குள் ராஜஸ்தான் மாநிலத்தின் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் பாஜக சார்பில் அங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கான வாரிசு பணியை, அவர்களின் மனைவியருக்கு பதிலாக வளரும் குழந்தைகளுக்கு பிற்பாடு தருவதாக முதல்வர் அசோக் கெலாட் கூறி வருகிறார். பாஜக மற்றும் வீரர் குடும்பத்தினர் இதை ஏற்காது, மனைவியருக்கே பலன்களை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in