சீனாவில் மாணவரின் உடல் அடக்கம்: காணொளியில் மகனின் முகத்தைப் பார்த்த பெற்றோர்: கண்கலங்க வைத்த சம்பவம்

சீனாவில் மாணவரின் உடல் அடக்கம்: காணொளியில் மகனின் முகத்தைப் பார்த்த பெற்றோர்: கண்கலங்க வைத்த சம்பவம்

சீனாயில் உயிரிழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. மாணவனின் இறுதிச்சடங்கில் பெற்றோர், உறவினர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்றது அனைவரின் கண்களை கலங்க வைத்தது.

புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் என்பவரது மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள (QIQIHAR MEDICAL UNIVERSITY ) பல்கலைக்கழகத்தில் 2017-18-ம் மருத்துவ படிப்பு படிக்க தொடங்கி தேர்ச்சியும் பெற்றார். கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு இருந்ததால் ஆன்லைன் மூலமாகவே கல்வியை கற்று முடித்த மாணவர் ஷேக் அப்துல்லா மருத்துவ பயிற்சிக்காக கடந்த ஆண்டு 11-ம் தேதி மீண்டும் சீனா சென்றுள்ளார். பின்னர் அந்நாட்டின் விதிமுறைப்படி 8 நாட்கள் கரோனாவின் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்ட ஷேக் அப்துல்லா அதன்பின் தனது பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ளார்.

இதன் பின் ஷேக் அப்துல்லாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் அங்குள்ள ஹர்பன் சிட்டி மருத்துவமனையில் உள்ள சிகிச்சை பெற்று வருவதாக அவரது பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் கரோனா வேகமாக பரவி வருவதால் பதற்றம் அடைந்த பெற்றோர் அங்கு இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, அப்துல்லாவுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி மாணவர் அப்துல்லா உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்த மாணவரின் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு வர மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், தற்போது சீனாவில் கரோனா உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாணவனின் உடலை சொந்த ஊர் கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், மாணவன் ஷேக் அப்துல்லாவின் உடல் இன்று இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. மகனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in