புதுச்சேரி சிறுவர்களின் விபரீதம்: யூடியூப் உபயத்தில் ‘வெடிகுண்டு’ தயாரித்து வீச்சு!

புதுச்சேரி சிறுவர்களின் விபரீதம்: யூடியூப் உபயத்தில் ‘வெடிகுண்டு’ தயாரித்து வீச்சு!

புதுச்சேரியை சேர்ந்த 6 சிறுவர்கள் ‘வெடிகுண்டு’ தயாரித்து, அவற்றை பரிசோதிக்கும் முயற்சியில் போலீஸ் கைதுக்கு ஆளாகி இருக்கிறார்கள். யூடியூப் பார்த்து ஆர்வக்கோளாறில் விபரீத முயற்சியில் இறங்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததிருக்கிறது.

பாலாஜி திரையரங்கு அருகே சாந்தி நகர் விரிவாக்கப் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சாலையில் ’வெடிகுண்டுக்கு’ நிகரான வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையும், அந்த அதிர்ச்சியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் முன்பக்க கண்ணாடி உடைந்திருப்பதையும் பார்த்த மக்கள் பீதியடைந்தனர்.

பொதுமக்கள் தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீஸார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் சில சிறுவர்கள் சம்பவ இடத்தில் குழுமி இருந்ததையும், பின்னர் சிதறி ஓடியதும் உறுதியானது. அந்த பதிவுகளின் அடிப்படையில் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறுவர்கள் 6 பேருமே 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும், அவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் எனவும் தெரிய வந்தது. சிறுவர்கள் ஆர்வக்கோளாறில் செயல்பட்டதும், இதற்கு முன்னதாக எந்தவொரு குற்றச்செயலிலும் அவர்கள் ஈடுபட்டதில்லை எனவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

யூடியூபில் வெடிகுண்டு தயாரிப்பு குறித்த ஒரு வீடியோவை பார்த்ததும், அதே போன்று தயாரிக்க விரும்பியிருக்கிறார்கள். கூழாங்கற்கள் மற்றும் தீபாவளி பட்டாசுகளில் இருக்கும் வெடி மருந்து ஆகியவற்றை சேகரித்து 2 வெடிப்பொருட்களை தயாரித்தவர்கள், நள்ளிரவில் அவற்றை சோதித்தறிய முடிவு செய்திருக்கின்றனர். அப்படி அவர்கள் தயாரித்து வீசிய ’வெடிகுண்டுகளில்’ ஒன்று தோல்வியடைந்திருக்கிறது. மற்றொன்று சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் வெடிக்கவே, அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள்.

யூடியூப் பார்த்து ஆர்வக்கோளாறில் விபரீத முயற்சியில் இறங்கிய சிறுவர்கள் தற்போது கைதாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உள்ளங்கையில் உலகத்தை திணிக்கும் இணையத்தில், விபரீதங்களும் ஒளிந்திருக்கும். எனவே சிறுவயதினரை கண்காணிப்பதும் நெறிப்படுத்துவதும் பெரியவகள் கடமை. தவறினால் அதற்கு அதிக விலையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in