புதுச்சேரி மின் ஊழியர்கள் மீது எஸ்மா பாயும்: தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார். 

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரி மின் துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களின் போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.

நேற்று இரவு புதுச்சேரியில்  துணை மின் நிலையங்களுக்குள் புகுந்த மின்துறை ஊழியர்கள்  மின்தடையை ஏற்படுத்தி விட்டு சென்றனர். இதனால் புதுச்சேரி இருளில் மூழ்கியது.  இதனால்  பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் பொதுமக்கள் இறங்கினார்கள்.  இந்த நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  தலைமைச் செயலாளர் காவல்துறை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதுவை துணை மின் நிலையங்களைப் பாதுகாக்க துணை ராணுவப்படையை வரவழைக்க உத்தரவிட்டார். 

அத்துடன் மத்திய மின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு துணை மின்நிலையங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.   துணை மின்நிலையங்களில் புகுந்து மின்தடையை ஏற்படுத்திய ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், " வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் தங்களது  வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும், அப்படி திரும்பாத ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்" என்று எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in