நடராஜர் கோயிலுக்கு வந்த ஆளுநர் தமிழிசை அவமதிக்கப்பட்டாரா?-சிதம்பரத்தில் நடந்தது என்ன?

நடராஜர் கோயிலுக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன்
நடராஜர் கோயிலுக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜரை தரிசிக்க வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் அங்குள்ள தீட்சிதர்களால் அவமதிக்கப்பட்டார் என்று செய்திகள் பரவி வரும் நிலையில் அதற்கு ஆளுநர் தமிழிசை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் விழா வெகு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்த முடிந்த நிலையில் நடராஜருக்குரிய மகா அபிஷேகம் மற்றும் தரிசனம் விழா ஆகியவை இன்று நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணி அளவில் நடராஜருக்கு மகாபிஷேகம் தொடங்கியது. இதற்காக தேரில் இருந்து நேற்று இரவு இறக்கப்பட்ட நடராஜர் ஆயிரம் கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார். அங்கு மகாபிஷேகம் தொடங்கிய நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடராஜரை தரிசனம் செய்வதற்காக காலை ஐந்து மணி அளவில் நடராஜர் கோயிலுக்கு வந்தார்.

அவருக்கு தீட்சிதர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. யானை கொண்டு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிதம்பரம் போலீஸார் படை சூழ கோயிலுக்கு வந்தவர், அனைவரையும் வெளியிலேயே இருக்குமாறு கூறிவிட்டு ஆயிரங்கால் மண்டபத்துக்கு சென்றார். அங்கே நடராஜருக்கு நடைபெற்ற அபிஷேகத்தை காண ஏதுவாக நடராஜருக்கு எதிரில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த தீட்சிதர் ஒருவர் இங்கு அமரக்கூடாது, எழுந்திருங்கள், அந்த இடத்தில் அமருங்கள் என்று வேறொரு இடத்தை சுட்டிக் காட்டினாராம்.

ஆனால் நான் கடவுளை தரிசிக்க வந்துள்ளேன். இங்குதான் அமர்வேன் என்று அவரிடம் மறுப்பு தெரிவித்துவிட்டு தமிழிசை அங்கேயே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை தமிழிசை சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட அவர்களிடம் தெரிவிக்கவில்லை.

மீண்டும் அவர் புதுவை திரும்பிய நிலையில் உள்ளூர் பாஜகவினர் சிலர் இது குறித்த தகவல்களை வெளியில் பரப்பியுள்ளனர். இதனையடுத்து தீட்சிதர்களால் தமிழிசை சவுந்தரராஜன் அவமானப்படுத்தப்பட்டார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனையடுத்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழிசை சவுந்தர்ராஜன், "சிதம்பரம் நடராஜர் கோயிலில் என்னிடம் ஒரு தீட்சிதர் வந்து இந்த இடத்தில் உட்கார வேண்டாம் என்றார். மற்றொரு இடத்தைக் காட்டி அங்கே உட்காரக் கூறினார். நான் ஏற்கவில்லை. இறைவனை பார்க்க வந்துள்ளேன். இங்குதான் உட்காருவேன் என்றேன். அதோடு அவர் போய் விட்டார். அதை நான் பெரிதாக நினைக்கவில்லை.

மற்ற தீட்சிதர்கள் இறைவன் பிரசாதத்தை கொண்டு வந்து தந்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில் என்றாலே பிரச்சினையாகவே உள்ளது. தீட்சிதர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மக்களுடைய பிரச்சினையும் சிவன்தான் தீர்க்க வேண்டும்" என்று கூறினார்.

பொது மக்களிடம் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொள்வதாக நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது அண்டை மாநிலத்தின் துணைநிலை ஆளுநரையும் அவர்கள் அவமதித்ததாக கூறப்படுவது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in