மாணவனுக்கான சிகிச்சையில் எந்த தவறும் இல்லை; ஆனால்..! - புதுச்சேரி சுகாதார இயக்குநர் புதுத் தகவல்

புதுச்சேரி சுகாதார இயக்குநர் ஸ்ரீராமுலு
புதுச்சேரி சுகாதார இயக்குநர் ஸ்ரீராமுலு

``காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட பள்ளி மாணவனுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை'' புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த பால மணிகண்டன் படிப்பு, விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் முதல் மாணவனாக இருந்து வந்துள்ளான். இதனால் அதே வகுப்பில் படித்து வந்த தனது மகளுக்கு போட்டியாக இருப்பதாக கருதிய சக மாணவி ஒருவரின் தாயார் கடந்த 2-ம் தேதி விஷம் கலந்த குளிர்பானத்தை சிறுவனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

பள்ளியின் பாதுகாவலர் மூலமாக கொடுக்கப்பட்ட அந்த குளிர் பானத்தை குடித்த சிறுவன் பலமுறை வாந்தி எடுத்துள்ளான். அத்துடன் மயங்கி விழுந்த சிறுவனை பெற்றோர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 24 மணி நேரத்திற்கு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அதன்பேரில் மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியாவை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சிய போக்காலேயே மாணவி உயிரிழந்ததாக பெற்றோர் உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ், பாலசந்திரர் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை புதுச்சேரி அரசு அமைத்தது. இந்தக்குழு மருத்துவமனையில் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை நேற்று மருத்துவத்துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் கலந்து கொடுக்கப்பட்டது எந்த வகையான விஷம் என தெரியவில்லை என்றும், தெரிந்திருந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளித்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியாததால் வாந்தி மற்றும் வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்றும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தவறில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதார இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in