என் அம்மாகிட்ட போறேன், இனி என்னைத் தேடாதே: கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன எம்எல்ஏ மகன்!

திலகரசர்
திலகரசர்

புதுச்சேரி மாநில எம்எல்ஏ ஒருவரின் மகன் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகியிருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவர் அங்காளன். இவர் புதுச்சேரி செல்லிப்பட்டு புதுகாலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் திலகரசர்(28). இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்ற திலகரசர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அங்காளன் எம்எல்ஏவின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், மகனைப் பற்றிய எந்த தகவல்களும் தெரிய வரவில்லை. இதனால் அவரது குடும்பம் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானது.

இந்த நிலையில் வீட்டில் திலகரசது அறையில் தேடிய போது திலகரசர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், 'நான் என் அம்மாகிட்ட போறேன். இனி என்னை தேடாதே. ஓ.கே. குட் லக்' என எழுதியிருந்தது. இதையடுத்து மேலும் அதிர்ச்சிக்கு உள்ளான அங்காளன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும், பல இடங்களுக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் திலகரசர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அதற்கு மேலும் தாமதிக்காமல் இது தொடர்பாக திருக்கனூர் போலீஸில் நேற்று இரவு அங்காளன் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள திருக்கனூர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் காணாமல் போன திலகரசரைத் தேடி வருகின்றனர். அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0413- 2688435 எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in