நிர்வாண வீடியோவை வெளியிடுவோம்: அரசு பணியாளருக்கு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

நிர்வாண வீடியோவை வெளியிடுவோம்: அரசு பணியாளருக்கு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

ராமநாதபுரம் அருகே அரசு பணியாளரை பட்டப்பகலில் நிர்வாணப்படுத்தி பணம் பறித்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஆத்மநாதசுவாமி தெருவைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன். ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளராக இருந்த இவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மகன் பி.இ., பட்டதாரியான விஜயகுமாருக்கு (25) இளநிலை உதவியாளர் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜன.14 -ம் தேதி இவர் பேராவூருக்கு அவரது சித்தப்பாவை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அவரிடம் லிப்ட் கேட்டு பயணித்த நபர் கத்தியைக் காட்டி, வழியில் உள்ள காட்டுக்கருவேல் மர புதருக்குள் அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கெனவே இருந்த சிலர் விஜயகுமாரை நிர்வாணப்படுத்தி தாக்கி, வீடியோ எடுத்தனர்.

மேலும் விஜயகுமார் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ. 21 ஆயிரத்தை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதை வெளியே சொன்னால், நிர்வாண வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றனர். இதனால் கொலைமிரட்டலுக்கு பயந்து கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்த அவர் மீது சந்தேகத்தின் பேரில் அவரது தாய் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவம் குறித்து விஜயகுமார் கூறினார்.

இதையடுத்து கத்தியைக் காட்டி மிரட்டியும், நிர்வாணப்படுத்தி தாக்கிப் பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் விஜயகுமார் புகார் அளித்தார். இதனடிப்படையில், கேணிக்கரை போலீஸார் துரித விசாரணை நடத்தினர்.

இதில் தர்கா வலசை நாகலிங்கம் மகன் கலைச்செல்வன் (26), முட்டன்வலசை பாக்கியம் மகன் முனியசாமி (29), காளிமுத்தன் மகன் முனீஸ்வரன் (24) உள்பட 6 பேர் என தெரிந்தது. அவர்களைப் போலீஸார் கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in