17 மணி நேரத்துக்கு மேலாக மயக்கநிலையில் இருக்கும் மக்னா யானை; காரமடையில் விட எதிர்ப்பு, ஆனைமலைக்கு விரையும் வனத்துறை

ஊருக்குள் ஹாயாக வலம் வந்த மக்னா
ஊருக்குள் ஹாயாக வலம் வந்த மக்னா

சேத்துமடை பகுதியில்  ஊருக்குள் சுற்றித்திரிந்த மக்னா யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு காரமடை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்  மீண்டும் டாப்சிலிப் கொண்டு செல்லப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை மக்னா வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு  கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை அங்கிருக்காமல்  பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை வழியாக கோவை மாநகருக்குள் நுழைந்தது.  செல்வபுரம் வழியாக நொய்யலாற்றை அடைந்த மக்னா யானை நொய்யல் வழித்தடத்திலேயே பயணித்து வந்தது. 

மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியை மேற்கொண்ட வனத்துறையினர் மற்றும் வன மருத்துவர்கள் டாப்சிலிப் பகுதியிலிருந்து கும்கி யானை சின்னதம்பியை வரவழைத்தனர்.  பேரூர் அருகே உள்ள ஒரு வாழைத் தோப்பில் தஞ்சம் புகுந்த மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையான சின்னதம்பியின் உதவியுடன் நேற்று பிடித்தனர்.

ஆனைமலைக்கு கொண்டு செல்லப்படும் மக்னா யானை
ஆனைமலைக்கு கொண்டு செல்லப்படும் மக்னா யானை

இதனையடுத்து பிடிபட்ட மக்னா யானையை காரமடை வனப்பகுதியில் விடுவதற்கு நேற்று வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதற்கு அப்பகுதி  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் யானையை ஏற்றி வந்த லாரி  மேட்டுப்பாளையம் மரக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை யானைக்கு உணவு வழங்கப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட தீவிர ஆலோசனையின் பேரில்  யானையை மீண்டும் டாப்சிலிப் வரகளியாறு முகாமில்  கொண்டு சென்றுவிட முடிவு செய்துள்ள  வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.  நேற்று மாலை 4.30 மணிக்கு மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடிக்கப்பட்டது. 17 மணி நேரத்துக்கு மேலாக யானை மயக்க நிலையில் இருப்பதால் விரைவாக அதனை விடுவிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in