சீர்காழி அருகே தீண்டாமை சுவரா? - கண்டனப் போராட்டத்தால் பரபரப்பு
சீர்காழி அருகே தீண்டாமைச் சுவர் கட்டப்படுவதாக கூறி அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இன்று சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் தாண்டவன்குளம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். அதற்கு அருகே தனியார் இடத்தில் உரிய அனுமதி பெற்று வீட்டு மனைகள் போடப்பட்டு தனியாரால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த மனைப்பகுதி முழுமைக்கும் தனியாரால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. அது தங்களை தனிமைப் படுத்தும் தீண்டாமைச் சுவர் என அண்ணா நகர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எனவே அதை தடுத்து நிறுத்தக் கோரியும், அங்குள்ள கட்டுமானப் பொருட்களை அப்புறப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமையில் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அண்ணா நகர் பகுதியில் தீண்டாமை சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தீண்டாமை சுவர் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.