இந்தி தெரிந்திருக்க வேண்டும்: மேலாளரின் செயலால் பஞ்சாப் நேஷனல் வங்கிக்குப் பூட்டுப் போட்ட போராட்டக்காரர்கள்!

பூட்டு போட்டு விட்டு காத்திருக்கும் போராட்டக்காரர்கள்
பூட்டு போட்டு விட்டு காத்திருக்கும் போராட்டக்காரர்கள்

புதுச்சேரி  மாநிலம் முதலியார் பேட்டையில் செயல்பட்டு வரும்  பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்து, இன்று அவ்வங்கியை  இழுத்துப் பூட்டி போராட்டம் நடந்தது.

முதலியார் பேட்டையில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்துள்ள புதுச்சேரி தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயலாளர் இரா. வேல்சாமி என்பவர் கடந்த 12-ம்  தேதியன்று வங்கிக்கு சென்றிருந்தார். அங்கு காசாளராகப் பணியாற்றும் வடமாநில பெண் அவரிடம் இந்தியில் உரையாடினார். வாடிக்கையாளர்களை சந்திக்கும் இடத்தில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமே  எனக் கேட்டு, வங்கி மேலாளர் திரிபாதியிடம் வேல்சாமி முறையிட்டார். 

அதற்கு பதில் அளித்த மேலாளர், “எங்களுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியும். ஆகவே இங்கு வரும் உங்களுக்கு இந்தியோ அல்லது ஆங்கிலமோ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்று எஜமானர் தோரணையில் அடாவடியாகப் பேசினாராம்.  மேலும் அவ்வங்கியின் அனைத்துப் படிவங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் உள்ளதே தவிர, தமிழில் ஒரு படிவம் கூட இல்லை. 

வங்கி மேலாளர் பேச்சு வார்த்தை
வங்கி மேலாளர் பேச்சு வார்த்தை

புதுச்சேரி தமிழ் மண்ணில்  பணியாற்றக் கூடிய இந்திய அரசு மற்றும் பொது நிறுவன ஊழியர்கள் தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும். தமிழ் தெரியவில்லை என்றால் ஆறு மாதத்திற்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதி. எங்கு வேலை பார்க்கிறாரோ அந்த மண்ணின் மொழியை கற்றுக் கொண்டு அந்த மண்ணின் மொழியில் பேச வேண்டும். ஆனால், வேண்டுமென்றே தமிழரிடத்தில் தங்கள் தாய்மொழியான இந்தியில் பேசி, அடாவடி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டும் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இதை எதிர்த்து போராட்டம் அறிவித்தனர்.

பஞ்சாப் வங்கியின் இந்த இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்தும், மேலாளரை மன்னிப்புக் கேட்கக் கோரியும், இன்று  காலை அவ்வங்கியின் முதன்மை வாயிலை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடந்தது. முன்னதாக வங்கியின் துணை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கி சார்பில் எவ்வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து போராட்டக்காரர்கள்  வங்கியை தாங்கள் கொண்டு வந்திருந்த பூட்டால் பூட்டிவிட்டு, அதன் வாயிலேயே முழக்கமிட்டு அமர்ந்திருந்தனர். 

இதையடுத்து அங்கு வந்த வங்கி மேலாளர்,  வேல்சாமியிடம் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டதுடன், 15 நாட்களுக்குள் வங்கி படிவங்கள் அனைத்திலும் தமிழ் இடம் பெறச் செய்வோம் என்று உறுதிமொழி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை  போராட்டக்காரர்கள் இழுத்து பூட்டிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in