‘வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்’: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்

‘வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்’: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்

சின்னசேலம் பகுதி பள்ளி முன்பு வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரட்டப்பட்டுள்ளனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய ஆட்சியர் ஸ்ரீதர், “ பள்ளி மாணவி மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கினை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் அடிப்படையில் கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் திரட்டப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மேலும் குவிவதை தடுக்க கள்ளக்குறிச்சி தாலுக்கா, சின்னசேலம், நைனார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என தெரிவித்தார்

சின்னசேலம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக மாற்றுப்பாதையில் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சேலத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் வேப்பூர் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக இன்று குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர், பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களுக்குக்கும் தீவைத்தனர். தற்போது போராட்டக்காரர்களை விரட்டியடித்த பின்பு போலீசாரின் கட்டுப்பாட்டில் பள்ளி வளாகம் வந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in