தமிழகத்தில் நான்கு கட்டப்போராட்டம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

விக்கிரமராஜா
விக்கிரமராஜா

தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறை சார்பில் திடீரென முன்னறிவிப்புகளின்றி வணிக நிறுவனங்களுக்குள் நுழைந்து மேற்கொள்ளப்படும் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை, காஞ்சிபுரம் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை பெரியமேட்டில் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இன்று  நடந்தது. இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்திட கோரியும், இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் 4 கட்ட போராட்டங்களை நடத்துவது என அந்த கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக ஜன.10-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகள் முன்பு விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது என்றும், விழிப்புணர்வு 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 2-ம் கட்டமாக ஜன.24-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்,  அதனைத் தொடர்ந்து 3-ம் கட்டமாக உண்ணாவிரதமும், 4-ம் கட்டமாக கடையடைப்பு போராட்டமும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கான தேதிகள் 24-ம் தேதியன்று  அறிவிக்கப்படும் என தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in