தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் விரைந்து நடவடிக்கை: கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் விரைந்து நடவடிக்கை: கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி

தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் அதுகுறித்து விரைந்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் தமிழக காவல் துறை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி பேரணி நடைபெற்றது.

சென்னை போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் தமிழக காவல்துறை சார்பில் கமாண்டோ படையினர், ஆயுதப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல்ப்படையினர், காவல் வாத்தியக்குழுவினர், மகளிர் கவ்வாத்து குழுவினர் என சுமார் 500 காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காவல் துறையினரின் அணிவகுப்பு பேரணியானது போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் தொடங்கி, கொடிமர இல்ல சாலை வழியாக முத்துசாமி பாலம் வரை சென்று மீண்டும் போர் நினைவுச் சின்னம் அருகே வந்து நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தலைமையில் காவல்துறையினர் ஒற்றுமை தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் வடக்கு மண்ட கூடுதல் ஆணையர் அன்பு கூறுகையில், " காற்றாடி, மாஞ்சா நூல் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் மாஞ்சா நூல் விற்பவர்கள் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும். மழைக்காலத்தை தொடர்ந்து வட சென்னை பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும் தேவையான ஏற்பாடுகள்குறித்து காவல்துறையால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரித்து வருகிறது. அவர்கள் விசாரிக்கும் போது காவல்துறை அதில் தலையிட்டு விசாரிக்க முடியாது. காவல்துறைக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எந்த தகவல் கிடைத்தாலும் அதுகுறித்து விரைந்து விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in