தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 17வது நாளாக இன்றும் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளத்திற்கு அருகே 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பக்கரை அருவி புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கொடைக்கானல், வட்டக்கானல் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக இந்த அருவியில் நீர் பெருகி வரும். அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் குளிப்பதற்கு மிகவும் ரம்மியமான சூழல் காணப்படும். அதனால் இங்கே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். பொதுவாக கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் கும்பக்கரை அருவிக்கு சென்று நீராடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த மாதம் துவக்கத்திலிருந்தே வடகிழக்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த மாதம் 3-ம் தேதியில் இருந்தே அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
ஆனாலும் நீர் வரத்து குறைந்தால் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அங்கு வருகின்றனர். ஆனாலும் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்த நிலையில் இன்று பதினேழாவது நாளாகவும் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.