காதல் மனைவியைக் கொல்ல பேராசிரியர் போட்ட பிளான்: காட்டிக்கொடுத்த சிசிடிவி

கைது செய்யப்பட்ட பேராசிரியர குமாரசாமி.
கைது செய்யப்பட்ட பேராசிரியர குமாரசாமி.காதல் மனைவியைக் கொல்ல பேராசிரியர் போட்ட பிளான்: காட்டிக்கொடுத்த சிசிடிவி

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மாறுவேடத்தில் சென்று அவரை பிளேடால் அறுத்துக் கொலை செய்ய முயன்ற கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு வேம்பாக்கம் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் குமாரசாமி (56). இவர் நந்தனம் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்குத் திருமணமாகி ஜெயவாணி( 36) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இந்த நிலையில், பிப்.11-ம் தேதி ஜெயவாணியின் தந்தை ஜெயக்குமார் உடல் நலக்குறைவால் காலமானார். அதனால் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜெயவாணி சென்றுள்ளார். இதன் பின்னர் எழும்பூரில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்று குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் பிப்.14-ம் தேதி ஜெயவாணி, எழும்பூர் ஆங்கிலோ இந்தியன் சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத மர்மநபர் வழிமறித்துள்ளார். பிளேடால் அவர் ஜெயவாணியை அறுத்து விட்டுத் தப்பிச்சென்றார். இதுகுறித்து எழும்பூர் போலீஸில் ஜெயவாணி புகார் செய்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த காட்சிகளைப் பார்த்த ஜெயவாணியின் குடும்பத்தினர், பிளேடால் அறுத்து விட்டு தப்பிச்செல்வது ஜெயவாணியின் கணவர் குமாரசாமி போல் இருப்பதாகச் சந்தேகம் தெரிவித்தனர். உடனடியாக குமாரசாமியை பிடித்து போலீஸார் விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

கல்லூரி பேராசிரியரான குமாராசாமியை ஜெயவாணி காதலித்து திருமணம் செய்துள்ளார். பேராசிரியரான குமாரசாமியிடம் யூடிசன் படிக்க வந்த ஜெயவாணி காதலாகியுள்ளார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்ததால் ஜெயவாணி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி 2011-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், குமாரசாமி தனது மனைவி ஜெயவாணியை எம்எஸ்சி நர்சிங் படிக்க வைத்துள்ளார்.

படிப்பை முடித்த ஜெயவாணி சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிக்குச் சேர்ந்து வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக குமாரசாமி சந்தேகம் அடைந்துள்ளார். ஜெயவாணி அடிக்கடி செல்போனில் பேசுவதும் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டிலிருந்து அடிக்கடி சிந்தாரிப்பேட்டைக்குச் சென்று ஜெயவாணி தங்குவதால் குமாரசாமிக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

இதனால் தகராறு முற்றவே, தான் படிக்கும் போது ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் சென்று விடப்போவதாகவும் ஜெயவாணி கூறியதால், குமாரசாமி அதிர்ச்சியடைந்தார். தன்னை விட்டு மனைவி பிரிந்து விடுவாரோ என்ற அச்சத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக தலையில் விக் வைத்து ஜெயவாணியை பிளேடால் அறுத்து விட்டுத் தப்பிச்சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து பேராசிரியர் குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மனைவியைக் கொல்ல மாறுவேடத்தில் பேராசிரியர் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in