`பண ஆசை காட்டுவார்கள்; எச்சரிக்கையாக இருங்கள்'- கடலூர் மாவட்ட மக்களை அலர்ட் செய்யும் பேராசிரியர் ஜெயராமன்

கடலூர் மாவட்டத்தில் ஆய்வுப்பணி
கடலூர் மாவட்டத்தில் ஆய்வுப்பணி

காவிரிப்படுகையில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், குமராட்சி, புவனகிரி, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் லிக்னைட் சுரங்கம் அமைக்க முன் ஆய்வு செய்யும் வேலைகளை  எம்.இ.சி.எல்  என்ற நிறுவனம்  தொடங்கியுள்ளது. இதற்கு "வீராணம் புராஜக்ட்" என்று பெயர்.  "நீர் ஆய்வு, மண் ஆய்வு" என்று பொய் கூறி, முதற்கட்டப் பணியை நடத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அங்கு நடப்பது  லிக்னைட் எடுப்பதற்கான முன் ஆய்வுதான். இக்கருத்து சரியானதும், உறுதிசெய்யப்பட்டதும் ஆகும்.

இப்பகுதிய மக்களை விரட்டிவிட்டு திறந்தவெளி சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுப்பார்கள். வயல்கள் கரிக்காடு ஆகும். குடியிருப்புகள் குலைந்துபோகும். மக்கள் அகதிகள் ஆவார்கள்! எச்சரிக்கை. எம்.இ.சி.எல் மற்றும் அதற்குக் கையாளாக செயல்படும் அதிகாரிகளின் சொற்களை நம்பவேண்டாம்.  பணத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய ஆய்வுகளை அனுமதிக்கவும் வேண்டாம். நிலத்தைக் கொடுக்கவும் வேண்டாம். இன்று ஒரு சிலர் செய்யும் தவறு நாளை ஒட்டுமொத்தத் பகுதியையுமே நிலக்கரிச் சுரங்கமாக மாற்றி விடும். 

கடந்த காலத்தில் நெய்வேலி லிக்னைட் சுரங்கம் அமைக்க தங்கள் வயல்களையும், வாழ்விடத்தையும் கொடுத்தவர்கள் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கும் நிரந்தரப்பணி என்பது வழங்கப் படவில்லை; விவசாயத்தை இழந்ததுதான் மிச்சம். 

எச்சரிக்கையாக இருந்து அடுத்த  தலைமுறைக்கு இந்த மண்ணை பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை என்பதை மறக்க வேண்டாம். காவிரிப் படுகை கரிக்காடு ஆவதைத் தடுத்து நிறுத்துவோம்!  இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தன் பணிகளைச் செய்து வருகிறது' என்று  தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in