குப்பையில் தூக்கி வீசப்பட்ட மாங்கொட்டைகளுக்கு உயிர் கொடுத்த பேரூராட்சி: ஐந்தாயிரம் கன்றுகள் ரெடி

வளர்ந்த மாமரக் கன்றுகளை மக்களுக்கு வழங்கும் பேரூராட்சி தலைவர்
வளர்ந்த மாமரக் கன்றுகளை மக்களுக்கு வழங்கும் பேரூராட்சி தலைவர்குப்பையில் தூக்கி வீசப்பட்ட மாங்கொட்டைகளுக்கு உயிர் கொடுத்த பேரூராட்சி: ஐந்தாயிரம் கன்றுகள் ரெடி

குப்பைசேகரிக்கும் போது கிடைத்த மாங்கொட்டைகளை, மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், மரக்கன்றுகளாக வளர்த்தெடுத்து பொதுமக்களுக்கு வழங்கி வரும் வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் செயல் அனைவராலும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மையில் நாள்தோறும் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என பிரித்தெடுக்கப்பட்டு வருகிறது.  

இவ்வாறு பிரித்தெடுக்கப்படும்  குப்பைகளில் கிடைத்த மாங்கொட்டைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் தனியாக பிரித்தெடுத்து சேகரிக்க துவங்கினர். 

கோடைகாலத்தில் மாம்பழ சீசன் என்பதால்  வத்தலகுண்டு பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் உட்கொண்டு குப்பைகளில் வீசப்பட்ட மாங்கொட்டைகள் அதிகம் சேர்ந்தது. இந்த மாங்கொட்டைகளை உலரவைத்து அதை நடவு செய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. பேரூராட்சி உரக்கிடங்கு அருகே காலியாக இருந்த இடத்தில் மாங்கொட்டைகளைப் பணியாளர்கள் நடவு செய்தனர். நாள் தோறும் இவை பராமரிக்கப்பட்டு வந்தது. 

முதற்கட்டமாக ஐந்தாயிரம் மா மரக்கன்றுகள் தற்போது வளர்ந்த நிலையில் உள்ளன. ஓரளவு வளர்ச்சி கண்ட பிறகு இந்த மா செடிகளை தேவைப்படும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது பேரூராட்சி நிர்வாகம். தூக்கி வீசப்படும் மாங்கொட்டைகளைக் கழிவுகளாக பார்க்காமல், அதை மீண்டும் உயிர்ப்பித்து மரக்கன்றுகளாக மாற்றும் வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதுகுறித்து வத்தலகுண்டு பேரூராட்சி தலைவர் பா.சிதம்பரம் கூறுகையில், " திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பிரித்தெடுக்கப்படும் பழக்கழிவுகள் மூலம் கிடைக்கும் விதைகளைக் கொண்டு தற்போது பசுமை பூங்காவில் பல்வேறு வகையான பழக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

மாம்பழ சீசன் தொடங்கியது முதல் சேகரிக்கப்படும் மாம்பழ விதைகளைக் கொண்டு சுமார் ஐந்தாயிரம் மா மரக்கன்றுகளை உருவாக்கியுள்ளோம். வத்தலகுண்டு பேரூராட்சியில் இடவசதி உள்ள வீடுகளில் பொதுமக்கள் வளர்த்து பலன் பெறும் வகையில் வழங்கி வருகிறோம். இதன்மூலம் இயற்கை சூழல் உருவாவதுடன் மக்களிடம் மரம் வளர்க்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in