போனில் அழைத்த ஸ்மிருதி; குரலை அடையாளம் காண முடியாத குமாஸ்தா: தொடங்கியது விசாரணை!

போனில் அழைத்த ஸ்மிருதி; குரலை அடையாளம் காண முடியாத குமாஸ்தா: தொடங்கியது விசாரணை!

அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள், தங்கள் துறை சார்ந்த பணிகளின்போது உயரதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடுவார்கள். சிலர் நேரடியாகவே கீழ்நிலை அலுவலர்களை அழைத்துப் பேசுவார்கள்.

அப்படித்தான் தன்னிடம் வந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குமாஸ்தாவை அழைத்துப் பேசியிருக்கிறார் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. அப்போது அந்த குமாஸ்தா சொன்ன வார்த்தைகள் அவர் மீதான விசாரணைக்கு வழிவகுத்திருக்கின்றன.

உத்தர பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் முஸாஃபிர்கானா தாலுகாவில் உள்ள பூரே பஹ்ல்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் சாவித்ரி தேவி. ஆசிரியராகப் பணிபுரிந்த அவரது கணவர் சமீபத்தில் காலமானார். எனினும், அதன் பின்னர் சாவித்ரி தேவிக்கு அவரது கணவரின் ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

முஸாஃபிர்கானா தாலுகாவில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்துவரும் கருணேஷ் என்பவர் இதுதொடர்பான பணிகளை முறையாகச் செய்யாததால்தான் ஓய்வூதியம் முடங்கியது எனக் கூறி, அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் சாவித்ரி தேவியின் மகன் கடிதம் மூலம் புகார் அளித்தார்.

இந்நிலையில், அந்தக் கடிதத்தை வாசித்த ஸ்மிருதி இரானி, ஆகஸ்ட் 27-ம் தேதி குமாஸ்தா கருணேஷுக்கு போன் செய்தார்.

ஆனால், போனில் தன்னிடம் பேசுவது மத்திய அமைச்சர் என்பதை நம்பாத கருணேஷ், யார் பேசுவது எனத் தெரியவில்லை எனக் கூறினாராம்.

இதையடுத்து அமைச்சர் அருகில் நின்றிருந்த தலைமை வளர்ச்சி அதிகாரி போனை வாங்கி, கருணேஷைக் கடிந்துகொண்டதுடன், அலுவலகத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு உத்தரவிட்டார்.

ஏற்கெனவே தனது பணிகளை முறையாகச் செய்யாத குமாஸ்தா, அமைச்சரின் குரலையும் அடையாளம் காண முடியாத நிலையில், அவர் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஸ்மிருதி இரானி அமேதி மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in