பிரேசில் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் சூறை: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம்

பிரேசில் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் சூறை: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம்

பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை நேற்று சூறையாடினார்கள். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ.நா பொதுச்செயலாளர், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபர் போல்சனாரோவை தோற்கடித்து முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். ஆனால் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்த காரணத்தால் லூயிஸின் வெற்றியை போல்சனாரோ ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து போரட்டங்களை நடத்தி வந்தார். இந்த சூழலில், லூயிஸ் ஒரு வாரத்திற்கு முன்பு பதவியேற்றார்.

ஆனால், லூயிஸ் அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டிற்கு அழைப்பு விடுத்து போல்சனரோவின் ஆதரவாளர்கள் ராணுவ தளங்களுக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இந்த சூழலில்தான் நேற்று நடந்தப் போராட்டத்தில், பிரேசில் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களில் போல்சனரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து சூறையாடினார்கள். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது. இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கலவரத்தைத் தூண்டியதாக ஜனாதிபதி லூயிஸின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று போல்சனரோ தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்த சம்பவங்களை கடுமையாக கண்டித்துள்ளார். பிரேசிலில் நாடாளுமன்றம் சூறையாடப்பட்டதற்கு ஐ.நா சபை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரேஸ், "பிரேசில் நாட்டு மக்களின் விருப்பம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மாண்பு மதிக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை நான் கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக அமைப்புகளுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

பிரேசிலில் நடந்த கலவரங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “பிரேசிலில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலை செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன். ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசிலுக்கு எங்களது முழு ஆதரவையும் வழங்குகிறோம்" என்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in