
கூட்டுக்குடும்பத்தின் பெருமையையும், உறவுகளின் மேன்மையையும் இளம் தலைமுறையினருக்கு உணர்த்திடும் வகையில் ஆதரவற்ற முதியோர்களுடன் தங்கள் பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்று குடும்ப திரைப்படமான "வாரிசு" திரைப்படத்தைப் பார்க்க வைத்திருக்கிறது மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று.
பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'வாரிசு' திரைப்படம் குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக உள்ளதாக பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய தலைமுறையினர் பெரும்பாலானோர் கூட்டுக்குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத வகையில் வளர்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உறவுகளின் மேன்மையை தெரியவைக்கும் விதமாகவும், கூட்டுக்குடும்பத்தின் உன்னதத்தை விளக்கும் விதமாகவும், மயிலாடுதுறையில் செயல்படும் தனியார் பள்ளியான ஈரோகிட்ஸ் என்ற பள்ளியின் நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக இப்பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 60 பேரை 'வாரிசு' திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
பள்ளியின் அருகில் செயல்படும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கி வசிக்கும் 15-க்கும் மேற்பட்ட மூதாட்டிகளுடன் இணைந்து மாணவர்களை அழைத்துச் சென்றால் அது இன்னும் கூடுதல் பயன் அளிப்பதாக அமையும் என்று கருதிய பள்ளி நிர்வாகத்தினர் அவர்களையும் அழைத்து வந்து 'வாரிசு' திரைப்படத்தை பார்க்கச் செய்தனர்.
இதன்மூலம் குழந்தைகள் குடும்ப உறவுகளின் மாண்பினையும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தங்களது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மூதாட்டிகளும் குழந்தைகளோடு இணைந்து வெளியில் வந்ததால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படம் பார்ப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.