தனியார் வாகன காப்பக உரிமையாளர் வெட்டிக்கொலை: மிளகாய் பொடி தூவிவிட்டு கொலையாளிகள் எஸ்கேப்

தனியார் வாகன காப்பக உரிமையாளர் வெட்டிக்கொலை: மிளகாய் பொடி தூவிவிட்டு கொலையாளிகள் எஸ்கேப்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியார் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் நள்ளிரவில் மர்மக்கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் தனியார் இருசக்கர வாகனக் காப்பகம் ஒன்று உள்ளது. தூத்துக்குடி பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் இந்த காப்பகத்தில் தினமும் காலை, மாலை, இரவு என எந்த நேரமும் நூற்றுக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் நிற்கும். அவற்றை நிறுத்துவதும், எடுத்துச் செல்வதுமாக இந்த வாகனக் காப்பகம் எப்போதுமே பரபரப்புடன் இருக்கும்.

இந்தக் காப்பகத்தை விருதுநகர் மாவட்டம், வாழவந்தாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்(30) என்பவர் நடத்திவந்தார். இன்று அதிகாலையில் தங்கள் டூவீலரை எடுக்க வந்தவர்கள் ஆனந்தராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் ஆனந்தராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த குற்றவாளிகள் மோப்பநாய் மூலம் போலீஸார் தங்களை நெருங்கிவிடக் கூடாது என்பதால் ஆனந்தராஜ் உடலைச் சுற்றி மிளகாய்ப்பொடியும் தூவிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனந்தராஜிற்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in