பொதுத்தேர்வில் சாதித்த சிறைவாசிகள்: 12-ம் வகுப்பு தேர்வில் 96.55% பேர், 10-ம் வகுப்பு தேர்வில் 93.85% பேர் தேர்ச்சி!

பொதுத்தேர்வில் சாதித்த சிறைவாசிகள்: 12-ம் வகுப்பு தேர்வில் 96.55% பேர், 10-ம் வகுப்பு தேர்வில் 93.85% பேர் தேர்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதில் 96.55 சதவீதம் பேரும், 10 -ம் வகுப்பில் 93.85 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு, மறு சீரமைப்பு நடவடிக்கைகளில், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் கல்வி முதன்மையானதும் முக்கியமானதாகவும் உள்ளது. சிறைவாசிகளில் பெரும்பாலானோர் எழுத படிக்கத் தெரியாதவர்கள் என்பதால் சிறைகளில் பல்வேறு எழுத்தறிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகள் லாபகரமான பணிகளில் ஈடுபடும் வகையில், அவர்களை தயார்படுத்தும் நோக்கில் சிறையில் பல்வேறு கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள் அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை (ம) பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன.

2021-2022-ம் கல்வி ஆண்டில், வெவ்வேறு சிறைகளைச் சேர்ந்த 7 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 58 சிறைவாசிகள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் கோரிக்கையை ஏற்று மாநில பள்ளிக் கல்வித்துறை சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதவழிவகை செய்யப்பட்டது.
இதில் 7 பெண் சிறைவாசிகள் உட்பட 56 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில், 96.55 சதவீதம் சிறைவாசிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போன்று, வெவ்வேறு மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளைச் சேர்ந்த 16 பெண் சிறைவாசிகள் உட்பட 242 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அவர்களில் 14 பெண் சிறைவாசிகள் உட்பட 199 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 93,85 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புழல் சிறைவாசி சுபாஷ் காந்தி 546 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், சண்முக பிரியா, ராஜேந்திரன் 536 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜாகீர் உசேன் 528 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதே போல 10-ம் வகுப்பு தேர்வில் மதுரை சிறைவாசி அலெக்ஸ் பாண்டியன் 428 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம், ஆரோக்ய ஜெயா 426 மதிப்பெண்கள் இரண்டாமிடத்தையும், புழல் சிறையைச் சேர்ந்த ரமேஷ் 421 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in