
சென்னையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற விவகாரம் தொடர்பாக எஸ்.ஐ உள்பட இருவரிடம் துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள பழைய;f கட்டிடம் ஒன்றில் கடந்த 4-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த மின்விசிறியை திருடினார். அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து வேப்பேரி போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷபி என்ற முகமது ஷபி(22) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்..
அப்போது சிறையில் முகமது ஷபி தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். இதன் பேரில் சிறை அதிகாரிகள் வேப்பேரி காவலர்களிடம் முகமது ஷபிக்கு முறையாக மருத்துவப் பரிசோதனை செய்து அழைத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து மார்ச் 6-ம் தேதி கைதி முகமது ஷபிக்கு மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் வாங்க வேண்டி வேப்பேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார், நசீர், ஆகியோர் சிறையில் இருந்து கைதியை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது கைதி முகமது ஷபி மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், வண்ணாரப்பேட்டை போலீஸார் தப்பி ஓடிய கைதி முகமது ஷபியை தேடிவந்தனர். இந்த நிலையில் வேப்பேரி தனிப்படை போலீஸார், முகமது ஷபியை கைது செய்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர்.. அவரை சிறையில் போலீஸார் அடைத்தனர்..
மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து சென்ற கைதி தப்பி ஓடிய விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. சிவக்குமார், நசீர் ஆகிய இருவரிடம் அதிகாரிகள் துறைரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்..