சிறைக்குள் கைலியைக் கிழித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்த கைதி: நாகையில் பரபரப்பு

செந்தில்
செந்தில்

பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர், கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தமிழ்மணி (40). இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும், கொள்ளிடம் அருகே உள்ள பாலுரான் படுகை கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (25) என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக செந்திலுடன் பாலூரன்படுகை கிராமத்தில் தமிழ்மணி சில மாதங்களாக வசித்து வந்தார். இந்த நிலையில், தமிழ்மணியின் நடத்தையில் செந்திலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடித்து விட்டு வந்து தமிழ்மணியிடம் அடிக்கடி செந்தில் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், செப்.26-ம் தேதி செந்திலுக்கும், தமிழ் மணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செந்தில் தாக்கியதில் தமிழ்மணி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்தக் கொலையை மறைக்கும் விதமாக தமிழ்மணியின் சடலத்தை வீட்டில் உள்ள பிரிட்ஜ் பக்கவாட்டில் மறைத்து வைத்தார். அடுத்த நாள் செந்தில் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர், கொள்ளிடம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், செந்தில் வீட்டிற்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் செந்தில் தப்பியோட முயற்சித்தார். பொதுமக்கள் உதவியுடன் செந்திலை போலீஸார் கைது செய்தனர். பின்னர் வீட்டில் போலீஸார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்மணியின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தமிழ்மணியின் உடலத்தை சீர்காழி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட செந்திலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் செந்தில், தான் அணிந்திருந்த கைலியைக் கிழித்து சிறை ஜன்னல் கம்பிகளில் கட்டி இன்று தூக்கு போட்டு கொண்டார். இதையறிந்த சிறைச்சாலை போலீஸார், செந்திலை மீட்டு நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே செந்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in