உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

கைதி மரணம்; காவலர்கள் மீது வழக்கு; உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிறை கைதி இறப்பு தொடர்பாக சிறை காவலர்கள் இருவர் மற்றும் உதவி சிறை அலுவலர் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 7ல் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் சரவணன் உயிரிழந்தார்.

இதையடுத்து சிறைக் காவலர்கள் இளையராஜா, வைரவமூர்த்தி உதவி சிறை அலுவலர் சுரேஷ்குமார் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூவரும் உயர் நீதிமன்ற கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், சரவணனி்ன் உடலில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்ததாக மருத்துவர் அறிக்கை உள்ளது. சரவணனின் வயிற்றில் ரத்தம் உறைந்திருக்கிறது. தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் கமிஷன் உத்தரவிட்டது. இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் இழப்பீடு வழங்கவும், தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் 2021-ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

சில குற்றப்பிரிவுகளில் மாற்றம் செய்து கீழமை நீதிமன்றத்தில் போலீஸார் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் அப்போதும் கூட மனுதாரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் பணியில் தொடர்கின்றனர். கொலைக் குற்றத்திற்கான ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டும் அதனடிப்படையில் குற்றவாளிகளைக் கைது செய்யாதது துரதிஷ்டமானது. மனு தாரர்களை போலீஸார் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மனுதாரர்கள் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தாக்கல் செய்த இறுதி அறிக்கையை கீழமை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். தவறு செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இறந்தவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் கொலை குற்றத்திற்கான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர்கள் மீது திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய கும்பகோணம் கிழக்கு போலீஸார் மீது தஞ்சாவூர் எஸ்.பி விசாரணை நடத்த வேண்டும். மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in