ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தண்டனை கைதி தப்பியோட்டம்: பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாரிடம் தீவிர விசாரணை!

கைதி சீனிவாசன்
கைதி சீனிவாசன்ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தண்டனை கைதி தப்பி ஓட்டம்: பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாரிடம் தீவிர விசாரணை!

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தண்டனை கைதி சீனிவாசன் இன்று காலையில் தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை ராயபுரம் சாந்தி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவரை கடந்த 2017ம் ஆண்டு திருட்டு மற்றும் தாக்குதல் வழக்கில் கண்ணன் குறிச்சி போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவருக்கு கடந்த 16ம் தேதி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி சீனிவாசனுக்கு நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று மதியம் போலீஸார் அவரை புழல் சிறைக்கு அழைத்து வந்தனர்.

புழல் மத்திய சிறை நுழைவாயிலில் வரும் போது கைதி சீனிவாசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு, நேற்று இரவு போலீஸார் அவரை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையின் 4 வது மாடியில் உள்ள கைதிகள் வார்டில் சேர்த்தனர். கைதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிறை காவலர்கள் மாரிமுத்து, மாரிசாமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் கைதி சீனிவாசன் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

கைதி சீனிவாசன்
கைதி சீனிவாசன்

இதன் பின்னர் சிறை காவலர்கள் அளித்த புகாரின் பேரில் ஸ்டான்லி மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதி சீனிவாசனை தேடிவருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களிடம் துறைரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிறைக் காவலர்கள் பாதுகாப்பில் இருந்த தண்டனை கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in