5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: இணைய சேவையில் புதிய பாய்ச்சல்!

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி:  இணைய சேவையில் புதிய பாய்ச்சல்!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் -2022 மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 13 முக்கிய இந்திய நகரங்களுக்கு 5G சேவைகளை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது ரிலையன்ஸின் ஜியோ அரங்கிற்கு சென்ற பிரதமர் மோடி, அதன் 'ட்ரூ 5ஜி' சாதனங்களை பயன்படுத்தியதுடன், ஜியோ கிளாஸ் மூலம் எவ்வாறு சேவைகளை பெறுவது என்றும் ஆய்வு செய்தார். சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, பிரதமர் மோடிக்கு ஜியோ 5ஜி சேவை குறித்த டெமோவை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது பிரதமர் மோடியுடன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய தொலைத்தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 கண்காட்சியைத் திறந்து வைத்த பிறகு, பிரதமர் மோடி பல்வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களால் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். ஏர்டெல், வோடபோன் ஐடியா, சி-டாட் மற்றும் பிற நிறுவனங்களின் ஸ்டால்களையும் அவர் பார்வையிட்டார். தீபாவளிக்கு பிறகு 13 இந்திய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் எனவும், அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி சேவை மூலமாக நாட்டில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் என்றும், இது இந்திய சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உள்ளது என்றும் இந்திய மொபைல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் வளர்ச்சிக்கான பாரம்பரிய தடைகளைத் தாண்டி, ஸ்டார்ட் அப்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கு 5ஜி சேவை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியாவின் மிகப் பெரிய 5ஜி தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக ரூ. 1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றைகள் ஏலம் போனது. இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ரூ 88,078 கோடிக்கான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. அதற்கடுத்த இடத்தில் ஏர்டெல் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in