
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியாரின் மகன் ராஜபாளையம் சென்றிருந்த போது முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் பொன்னுத்துரை. பாதிரியாராக உள்ளார். இவரது மகன் இம்மானுவேல் சேகரன்(21). இவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்களை தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி அவருக்கும் அப்பகுதிவாசிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் பாதிரியார் டேனியல் பொன்னுத்துரை நெல்லையில் வேறு வீடு பார்த்துக் குடியேறினர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், முறம்பு கிராமத்தில் உள்ள தன் தாத்தாவின் வீட்டிற்கு இம்மானுவேல் சேகரன் சென்று இருந்தார். நேற்று இரவு தாத்தா வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று காலையில் ராஜபாளையம் சாலையில் நல்லமநாயக்கர் ரோடு விலக்கில் நிர்வாண நிலையில் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இம்மானுவேல் சேகரன் சடலமாகக் கிடந்தார். ராஜபாளையம் தெற்கு போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இம்மானுவேல் சேகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெண்களை கேலி செய்யும் விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.