அமைச்சரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்ட பாதிரியார்: மன்னிக்க முடியாது என அமைச்சர் ஆவேசம்!

அமைச்சரை பயங்கரவாதி எனக் குறிப்பிட்ட பாதிரியார்: மன்னிக்க முடியாது என அமைச்சர் ஆவேசம்!

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகப் பணிகளுக்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் பாதிரியார், கேரள மீன்வளத்துறை அமைச்சர் அப்துர் ரகுமானை பயங்கரவாதி என விமர்சித்துள்ளார். இதற்கு அவர் வருத்தம் தெரிவித்த நிலையில் அமைச்சர் மன்னிக்க முடியாது என அறிக்கைவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிரியார் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விழிஞ்சம் கிராமம். இங்கு மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 7,500 கோடி முதலீட்டில் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் அதானி குழுமம் பெரும் முதலீட்டைச் செய்கிறது. இந்த நிலையில் இந்த துறைமுகப்பணிகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதனிடையே கேரள மீன்வளத்துறை அமைச்சர் அப்துர் ரகுமான், ‘இந்தத் துறைமுகத்திட்டத்தால் வேலைவாய்ப்பு பெருகும். விழிஞ்சம் துறைமுகம் வந்தே தீரும்” எனவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திவரும் பாதிரியார் தியோடோசியஸ் குரூஸ், ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர் அப்துர் ரகுமானை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, பாதிரியார் தியோடோசியஸ் குரூஸ் மன்னிப்புக் கேட்டார். ஆனால், அமைச்சர் அப்துர் ரகுமான் அதை நிராகரித்துள்ளார். கூடவே ஒருவருக்கு தளர்வான நாக்கு இருப்பதால் எந்த எல்லைக்கும் செல்லக்கூடாது” என கண்டனமும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 27-ம் தேதி விழிஞ்ஞம் துறைமுகப் போராட்டம், வன்முறையாக வெடித்தது. அதில் 40 காவலர்கள் காயம் அடைந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைச்சர் அப்துர் ரகுமான் தேச விரோதிகள் என விமர்சனம் செய்திருந்தார். அமைச்சர் இஸ்லாமியர் என்பதை விமர்சிக்கும் தொணியில் பாதிரியார் தியோடோசியஸ் குரூஸின் விமர்சனம் இருந்ததால் அமைச்சரும் கடும் அதிருப்தி அடைந்தார். அமைச்சர் மன்னிப்பை ஏற்காததைத் தொடர்ந்து விழிஞ்சம் போலீஸார் பாதிரியார் தியோடோசியஸ் குரூஸ் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in