சபரிமலையில் ஐயப்ப பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்: கடைகளுக்கு அபராதம் விதித்த ஆட்சியர்!

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்று பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் சுற்றுவட்டாரக் கடைகளில் தாசில்தார் சோதனை செய்து அபராதம் விதித்தார்.

மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடையானது கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இன்று மட்டும் இணைய வழி தரிசனத்திற்காக 53 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சிலர் முன்பதிவு செய்யாமலும் சபரிமலைக்கு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக நிலக்கல், பம்பை உள்பட பல்வேறு பகுதிகளிலும் இணையவழி முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களிடம் நிலக்கல், பம்பை, சன்னிதானம் செல்லும் மலைப்பாதையில் உள்ள கடைகளில் கூடுதல் விலைவைத்து விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் வருவாய்த்துறை தாசில்தார் தலைமையில் சபரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் சன்னிதானத்தில் உள்ள ஜூஸ் கடை, பம்பை பகுதியில் உள்ள ஸ்ரீஹரி பவன் ஹோட்டல் உள்ளிட்ட மூன்று கடைகளுக்குத் தலா 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், 43 ரூபாய் மதிப்புள்ள தர்பூசணி சாறு, 54 ரூபாய்க்கு விற்கப்படுவது தெரியவந்தது. இதேபோல் பண்டிதாவாளம் பகுதியில் உள்ள உணவகத்தில் பழைய உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திவ்யா, வெளிமாநில ஐயப்ப பக்தர்களிடம் கூடுதல் விலைவைத்து விற்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in