‘காந்தி வழியே சாந்தி வழி’- மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர்

காந்தி வழியே சாந்தி வழி என்றும் மகாத்மா காந்தியின் வழியில் சத்தியத்தின் பாதையை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுரை வழங்கினார்.

பீகார் மாநிலம் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர், விழாவில் அவர் பேசுகையில், "மகாத்மா காந்தியால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் சத்தியாகிரகத்தின் நினைவாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் இது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால், உலகம் முழுவதும் மதிக்கப்படும் விலைமதிப்பற்ற காந்திய பாரம்பரியத்துடன் நீங்கள் இணைக்கப்பட்டுள்ளீர்கள்.

காந்தியடிகளின் பாரம்பரியத்தைப் புரிந்து கொண்டு உள்வாங்கி எளிமை மற்றும் உண்மையின் நல்ல விளைவுகளைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். எளிமை மற்றும் உண்மையின் பாதையே உண்மையான மகிழ்ச்சி, அமைதி மற்றும் புகழுக்கான பாதையாகும். மகாத்மா காந்தி உலகம் முழுவதும் அஹிம்சைக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். உலகில் அமைதி நிலவ காந்தி வழியே சாந்தி வழியாகும். அவருடைய போதனைகளின்படி மனம், பேச்சு மற்றும் செயல்களால் எப்போதும் சத்தியத்தின் பாதையைப் பின்பற்ற மாணவர்கள் உறுதியேற்க வேண்டும். அஹிம்சை, இரக்கம், ஒழுக்கம் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய கொள்கைகளின் மீது காந்தியடிகள் மக்களின் நம்பிக்கையை அதிகரித்தார். நமது சமூகம், அரசியல், ஆன்மிகம் ஆகியவற்றை இந்தியத்தன்மையுடன் மிக ஆழமாக இணைத்தார். உலகில் பல்லாயிரம் மக்கள் காந்தியை இந்தியாவின் உருவமாக காண்கின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பரான் சத்தியாகிரகம் சமூகத்தின் கட்டமைப்பிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சம்பரான் இயக்கத்தின் போது, சாதி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் இணைந்து சமைத்து உண்டனர். சுதந்திரப் போரில் இது மக்களிடம் ஒற்றுமையை வலுப்படுத்தியது. சுமார் 106 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது உத்தரவின் பேரில், சம்பரான் மக்கள் சமூக, சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் பாதையைத் தேர்ந்தெடுத்து பிரிட்டிஷ் ஆட்சியைப் பணியவைத்தனர். இன்றும், சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் சின்னமான அந்தப் பாதை நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான பாதையில் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in