கோயிலைச் சுத்தம் செய்த குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

கோயிலைச் சுத்தம் செய்த குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரும், பழங்குடியினத் தலைவருமான திரெளபதி முர்மு, ஒடிசாவில் உள்ள சிவன் கோயில் ஒன்றின் தரையைச் சுத்தம் செய்யும் காட்சிகள் வைரலாகியிருக்கின்றன.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக யாரை முன்னிறுத்தும் எனக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், திரெளபதி முர்முவின் பெயர் இறுதிசெய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. டெல்லியில் நேற்று நடந்த பாஜக நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தகவலை நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார்.

இதையடுத்து, பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, திரெளபதி முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக், ‘இந்தியாவின் உயரிய பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரெளபதி முர்முவுக்கு வாழ்த்துகள். இதுதொடர்பாக, பிரதமர் மோடி என்னிடம் ஆலோசித்தபோது பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். இது உண்மையிலேயே ஒடிசா மக்களுக்கு ஒரு பெருமிதத் தருணம்’ என ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ராய்ரங்பூரில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்ற திரெளபதி முர்மு அங்கு வழிபட்டதுடன், கோயில் தரையையும் கூட்டிச் சுத்தப்படுத்தினார்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், ஒடிசாவிலிருந்து குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் எனும் பெருமையும், இந்தியாவின் உயரிய பதவிக்கு வரும் முதல் பழங்குடியினப் பெண் எனும் பெருமையும் திரெளபதி முர்முவுக்குக் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in