கோவை ஈஷாவிற்கு வரும் குடியரசுத் தலைவர்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீஸ்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கோவை ஈஷாவிற்கு வரும் குடியரசுத் தலைவர்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீஸ்

ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க வரும் 18‍-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கோவை வருகிறார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

டெல்லியில் இருந்து விமானம் மூலமாக வரும் 18-ம் தேதி கோவை விமான நிலையம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பின்னர் அங்கிருந்து கார் மூலமாக ஈஷா யோக மையத்துக்கு செல்கிறார். மகா சிவராத்திரியையொட்டி கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு செல்கிறார். அங்கே ஆதியோகி சிலை முன் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். அன்றைய தினம் இரவு ஈஷா யோக மையத்தில் தங்குகிறார்.

விழா முடிந்து மறுநாள் அதாவது, 19-ம் தேதி காலை காரில் புறப்பட்டு விமான நிலையம் சென்று அங்கேயிருந்து டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பயணம் செய்யும் பாதைகளில், சுமார் 35 கிமீ தூரத்திற்கு 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். விழா நடக்கும் ஈஷா யோக மையத்தில் சுமார் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

குடியரசுத் தலைவர் கோவைக்கு வரும் முன் மதுரை சென்று அங்கே மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண திட்டங்களை தயார் செய்யும் பணி நடக்கிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக கோவை வரவுள்ளதால் போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தேவையான பாதுகாப்பு திட்டங்களை வகுத்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வரும் 18, 19 ஆகிய தேதிகளில் பல்வேறு வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து போக்குவரத்து கழகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in