
கன்னியாகுமரிக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று காலையில் வந்திருந்தார். அவர் நிகழ்வினை முடித்துக்கொண்டு சற்றுமுன்பு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். அவரை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழக அரசின் சார்பில் வரவேற்றார்.
முன்னதாக இன்று காலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தனி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து விவேகானந்தர் பாறையைப் பார்வையிடச் சென்ற திரவுபதி முர்முவை, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் வரவேற்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தனிப்படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டார். இன்று குடியரசு தலைவர் வருகையை ஒட்டி, சுற்றுலாப்பயணிகளுக்கு காலையில் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து விவேகானந்தா கேந்திரத்தில் உள்ள ராமாயணக் காட்சிக் கூடத்தையும் திரவுபதி முர்மு பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்து, மீண்டும் அரசு விருந்தினர் மாளிகை வந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக இரு ஹெலிகாப்டர்கள் வந்தன. அதில் திரவுபதி முர்மு தனி ஹெலிகாப்டரிலும், அவருடன் பாதுகாப்புக்கு வந்த அதிகாரிகள் தனி ஹெலிகாப்டரிலும் வந்திருந்தனர். அதேபோல் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும்போதும் ஜனாதிபதி சென்ற தனிபடகின் முன்பு, கடலோரக் காவல்படையின் பாதுகாப்புப் படகு முன்னால் சென்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை ஒட்டி கன்னியாகுமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.