2,668 அடி உயர திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்ற ஏற்பாடுகள் தீவிரம்

திரி மற்றும் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் மூங்கில் கோலை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
திரி மற்றும் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் மூங்கில் கோலை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். வி.எம்.மணிநாதன்

திருவண்ணாமலை மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நினைத்தாலே முக்தி தரும் சிவத்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. அதற்கு முன்பாக கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபம் இன்று காலையில் ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதியில் இருந்து எடுத்து வரப்பட்ட தீபத்தைக் கொண்டு மற்ற மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அரோகரா முழக்கம் ஒலிக்க, ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒன்றே பரம்பொருள் என்பதை உணர்த்தும் வகையில் முதல் மடக்கைக் கொண்டு மற்ற மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக மாலை 6 மணிக்கு தீபங்களை மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள அகண்ட தீப கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். இதற்காக திரி மற்றும் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் மூங்கில் கோல் ஆகியவற்றை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.

மகாதீபத்தை காண்பதற்கு சிவலிங்கத்தை ருத்ராட்ச வடிவில் அலங்காரம் செய்து ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பக்தர் தலைமீது சுமந்து மலையேறிச் சென்றார். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை கோயில் ஊச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் மலை ஏறிவருகின்றனர்.

படங்கள்: வி.எம்.மணிநாதன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in