`அவள் தைரியமான பெண்; தற்கொலைக்கு வாய்ப்பில்லை'- தோழியின் மரணத்தை தாங்க முடியாமல் பெண் கண்ணீர்

`அவள் தைரியமான பெண்; தற்கொலைக்கு வாய்ப்பில்லை'- தோழியின் மரணத்தை தாங்க முடியாமல் பெண் கண்ணீர்

கேரளத்தில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண்களின் தொடர் மரணம் நிகழ்ந்து வந்தது. இதனால் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்துவந்தது. இந்நிலையில் இப்போது குடும்ப வன்கொடுமையினால் கர்ப்பிணி பெண் உயிர் இழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாக்குளம் மாவட்டம், பரவூரில் உள்ள தன் கணவரது வீட்டில் அமலா(24) என்னும் பெண் சடலமாக கிடந்தார். இவர் இரண்டு மாத கர்ப்பிணி ஆவார். அமலாவை புகுந்த வீட்டில் கொடுமைப்படுத்தியதாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர் பரவூர் போலீஸார்.

இதுகுறித்து பரவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரசாந்த் கூறுகையில், “திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமலாவுக்கும், பரவூரைச் சேர்ந்த ரஞ்சித்திற்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததுமே ரஞ்சித்தின் பெற்றோர் பீனா, அசோகன் ஆகியோர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அமலாவின் உறவுக்காரப் பெண் லாவண்யா என்பவர் சொன்னார். அதுமட்டும் இல்லாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அமலாவை அவரது தாய் வீட்டிற்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

அமலாவின் தோழியும், உறவுக்கார பெண்ணான லாவண்யா அதே பரவூரில் தான் வசிக்கிறார். அமலாவின் கணவர் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினரிடம் கூட பேசுவதில்லை. அதேபோலவே அமலாவும் இருக்க கட்டாயப்படுத்தியுள்ளார். அதே ஊரில் வசிக்கும் தன் உறவினர் லாவண்யாவை சந்திக்கக்கூட அமலா அனுமதிக்கப்படவில்லை. அமலா, அக்கம் பக்கத்து வீடுகளில் பேசினால் அவரது மாமியார் உடனே வந்து தலையிடுவார். அழைத்துச் சென்றுவிடுவார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமலா தன் பெற்றோரிடம் கூட போனில் பேச அனுமதிக்கப்படவில்லை. அவளது செல்போனையே பறித்துவிட்டார்கள் என்றும் லாவண்யா விசாரணையின் போது தெரிவித்தார். அமலாவின் உடல் பிரேத பரிசோதனை நேற்று மாலை நடந்தது. அதன் முடிவுகள் வந்த பின்பே மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும்” என்றார்.

அமலாவின் உறவுக்காரப் பெண் லாவண்யாவோ, “அமலா மிகவும் தைரியமான பெண். தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவு. அமலாவின் மாமனார் அசோகன் தான் திடீரென என் கணவரை அழைத்து அமலா இறந்துவிட்டதாகச் சொன்னார். வரதட்சணை கொடுமை இல்லை. அதேநேரம் குடும்ப வன்முறையில் அமலா தவித்தாள். அதனால் தற்கொலையா என்று மட்டும் பார்க்காமல் கணவர் குடும்பத்தின் சதி இருந்ததா என்றும் பார்க்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

குடும்ப வன்முறையால் கர்ப்பிணி பெண் மரணித்திருக்கும் சம்பவம் கேரளத்தில் மாதர் அமைப்பினரை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in