பலியான பெண் காவலர் உஷா
பலியான பெண் காவலர் உஷா

மின்னல் வேகத்தில் வந்து மோதிய பைக்: கர்ப்பிணி பெண் காவலர் பரிதாபமாக பலி

குமரிமாவட்டம், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக இருக்கும் உஷா சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கூலித்தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி உஷா(38). இவர் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக இருந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று இரவு வழக்கம்போல் காவல் நிலையத்தில் பணிமுடிந்து கட்டைக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் பைக்கை தன் வீட்டை நோக்கி சாலையைக் கடக்கத் திருப்பினார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த பைக் ஒன்று உஷாவின் டூவீலரில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் உஷா தூக்கி வீசப்பட்டார். கர்ப்பிணியான உஷாவின் தலை, கால் பகுதிகளில் பலத்தக் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகாமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காவலர் உஷா சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உஷா பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து, மின்னல் வேகத்தில் வந்து இடித்துவிட்டு, நிற்காமல் பைக்கில் சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in