
மத்திய பிரதேச மாநிலம் நீமாச் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கர்ப்பிணி பெண் ஒருவரை ஜேசிபி இயந்திரம் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மத்திய பிரதேசத்தின் 39 மாவட்டங்களில் கனமழை காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் நீமுச் மாவட்டத்தில் உள்ள ராவத்புரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியவில்லை. எனவே ஒரு ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதி உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் போலீஸார் ஏற்பாடு செய்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
உத்தரபிரதேசத்தின் எல்லையான ரேவா மாவட்டத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. கனமழையால் சாலைகள் சேதமடைந்ததால், சுகாதார நிலையத்துக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் ஆட்டோவிலேயே ஒரு கர்ப்பிணிப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் மாநில தலைநகர் உட்பட மற்றும் பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச், மண்ட்சூர் மற்றும் ரத்லாம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.